எங்கள் லோகநாதன்
காலனி பயப்படும் ஒரே விஷயம்
ஜிம்மிதான். வங்கியில்
வேலை பார்க்கும்
சோமுவின் வீட்டு நாய்தான் இந்த ஜிம்மி. மருத்துவமனையை ஒட்டியுள்ள வீட்டில்தான் சோமு குடியிருந்தான்.
மருத்துவமனைக்கு தினம்தோறும் பத்து நோயாளிகளையாவது கூடுதலாக அனுப்பி வைப்பதை ஜிம்மி ஒரு சேவையாகவே
பொறுப்புடன் செய்து வந்தது.
இத்தனைக்கும்
ஜிம்மி நாட்டுநாய்தான். ஆனாலும்
சோமு வீட்டார் அதைக் கொஞ்சும்போது
பார்க்க வேண்டுமே, உலகத்திலேயே உயர்ந்த ஜாதி நாய்களை வைத்திருப்போர்
கூட இப்படிக் கொஞ்சமாட்டார்கள். காலனியின்
மத்தியில் உள்ள தெருவாகப்
போய்விட்டதால்
எங்களால் ஜிம்மியைத் தவிர்க்கவே
முடியவில்லை. காலையிலும்,மாலையிலும்
ஜிம்மியிடம்
அர்ச்சனையைப்
பெறாமல் எவராலும்
தப்பவே முடியாது. வெளியே செல்லும்போது
சகுனம் பார்ப்பது உங்கள்
ஊர் பழக்கமாக இருக்கலாம். எங்கள் ஊர் கதையே வேறு. ஜிம்மி தெருவில்
தென்படுகிறதா இல்லையா
என்று பார்த்த பிறகுதான் எங்கள்
பாதங்கள் தெருவில் பதியும்.
எங்கள்
காலனிக்குள் போலீசே வந்ததில்லை. எல்லாம்
ஜிம்மியின் கைங்கரியம்தான். எங்கள் காலனி பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணம் ஆவது குதிரைக்
கொம்பாக இருந்தது. இதுவும் ஜிம்மியின் புகழ் அவனியெங்கும்
பரவியதால்தான். திருமணம்
ஆகவேண்டுமென
நவகிரகங்களை வலம் வந்து வேண்டியவர்களெல்லாரும் தவறாமல் ஜிம்மி குறித்த புகார்களையும் கடவுளின் காதில் போட்டு வைத்தார்கள். தபால்காரர் கூட ஜிம்மியின் பார்வையில் இன்று தப்பித்தால்
மறக்காமல் மாலையில்
வீடு திரும்பும்போது தேங்காய்
உடைப்பதாக வேண்டிக்
கொள்வார் என்றால் இதற்கும்
மேல் ஜிம்மியின் பெருமையை
சொல்லவும் வேண்டுமா
என்ன?
ஜிம்மியின் திருவாயால் கடிபடாதவர்கள்
சோமுவின் குடும்பத்தினர் மட்டுமே. இரவு நேரத்தில்
ஜிம்மிக்கு குஷி கரைபுரண்டோடும். தனக்குத்
தெரிந்த அனைத்து ராகங்களிலும்
குரைத்துத் தீர்த்துவிடும். நாங்கள்தான்
ராத்தூக்கம் கெட்டு பகலில்
போதை வயப்பட்டவர்கள் போல நடமாடிக் கொண்டிருப்போம்.
சோமுவிடம் ஜிம்மியைப் பற்றி ஊரே புகார் கூறிய போது, துளி கூட அலட்டிக் கொள்ளாமல், ""உங்க பாதுகாப்புக்காக கறுப்புப்
பூனையையா வளர்க்க முடியும்?'' என்று நக்கலடித்தான். கிட்டத்தட்ட சோமுவின்
முகவரியாகவும், கௌரவமாகவும்
ஜிம்மி மாறிவிட்டது. ஊரார் தன் மீதுள்ள பொறாமையால்தான் ஜிம்மியை
குறை கூறுவதாக நினைத்துக்
கொண்டான். நகராட்சிக்கு எழுதிப்போட்டும்
பலனேதுமில்லை. நகராட்சியின்
ஊழியர்கள் அனைவரும் சோமு வேலைப்பார்க்கும்
வங்கியில்தான்
கணக்கு வைத்துள்ளனர். போதாக்குறைக்கு இப்போதெல்லாம்
சம்பளம் கூட வங்கி மூலமாகத்தான் அவரவர் கணக்குகளில்
போய்ச் சேருகிறது. கேட்கவா வேண்டும்? சோமுவின் தரப்பு நியாயங்களை
எடுத்துச் சொல்லும் வக்கீலாக அல்லவா
மாறிவிட்டார்கள். பின் யாரிடம்தான் இக்குறையை முறையிடுவது?
இரவு வேளைகளில் உணவு உண்ணும்
போது கிசுகிசுக்க ஆரம்பித்து, பின் மெதுமெதுவாக ஊருக்கு வெளியே கூடிப் பேசும் அளவுக்கு துணிச்சல்
பெற்ற இளைஞர்கள் சிலரால்
வெற்றிகரமாக
ஒரு சதித் திட்டம் உருவாக்கப்பட்டது. காலனியின் சுதந்திரம் பற்றிய
கனவுகளுக்கு
இறகு முளைத்து ஊர் முழுக்க சுற்றி வரலாயின. ஜிம்மியை ஒழித்துக்
கட்டிய பின்னர் ஊர் எவ்வளவு நிம்மதியாக
இருக்கும் என்பதை கற்பனை
செய்து புளகாங்கிதம்
அடைந்தோம். ஜிம்மியின் நடவடிக்கைகள் வேவு பார்க்கப்பட்டன. நாள் முழுக்க அதன்
நிகழ்ச்சி நிரல் என்னென்னவென்பது எங்களுக்கு அத்துப்படியாகிவிட்டது. அதன் குரைப்பின்
தொனியை வைத்தே மாட்டியது உள்ளூரானா, வெளியூரானா
என்பதைக் கணிக்கும்
அளவுக்கு தேறிவிட்டோம்.
ஜிம்மி என்னவோ
நாட்டு நாய்தான். ஆனாலும்
அதன் தோரணை வெளிநாட்டு புசுபுசு நாய்க்கும்கூட வாய்ப்பது
கடினம். அப்படி
ஒரு கம்பீரம், லாகவம். தெருவில் அது லாந்தும்
போது பார்க்க வேண்டுமே, அடடா, ஒரு சிங்கத்தின்
கம்பீரத்தோடு
அது உலா வரும் அழகே அழகு. எதிரியையும் பாராட்டும்
அளவுக்கு பண்பாடுமிக்கவர்கள்
எங்கள் காலனிவாசிகள். ஜிம்மியின் மீது ஒரு "அட்டாக்' தொடுப்பதென
இளவட்டங்கள்
முடிவெடுத்தபோது பெருசுகள் தடுக்கவில்லை.
சரியான
தருணம் பார்த்து காத்துக் கிடந்த போது, ஒரு நாள் சோமு குடும்பத்தினர் கோயிலுக்கு
மொட்டைப் போட சென்ற செய்தி
வாட்டமாய் வந்து சேர்ந்தது.
உடனே செயலில்
இறங்க முடிவெடுத்தோம். தெருவின்
இரு பக்கத்திலும்
ஆட்களை நிற்க வைத்து, சோமுவின் வீட்டை மெதுவாக முற்றுகையிட்டோம். மன்னர்கள்
காலத்தில் போருக்குச் செல்லும்போது என்னென்ன
ஆயுதங்கள் எடுத்து சென்றதாக
சொல்லப்பட்டதோ, அதற்குச் சற்றும்
குறையாத ஆயுதங்களோடுதான் ஜிம்மியின் மீது படையெடுத்தோம். எல்லா பந்தாவும் ஜிம்மியைப் பார்க்கும்
வரையிலும்தான். படுத்துக்
கொண்டிருந்த ஜிம்மி எங்கள் சத்தத்தைக் கேட்டதும் சிவுக்கென
எழுந்து படக்கெனப் பாய்ந்து வந்து முதல் தெரு சீதாபதியை
மூர்க்கமாய் ஒரு கடி கடித்ததுதான் தாமதம், ஏந்திய ஆயுதங்களை அப்படியப்படியே
போட்டுவிட்டு, கூடிய கும்பல் ஒரு நொடியில்
பறந்து விட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு
பிறகு ஜிம்மியின் கோபம் எல்லை மீறிப் போய்விட்டது. தன்னை அடிக்கத்
திட்டமிட்டவர்களை
தேடித் தேடி கடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜிம்மியின்
கோபத்திலிருந்தும், பழிவாங்கலிலிருந்தும்
எப்படி தப்பிப்பது
என்பதே உடனடிப்
பிரச்னையாகிவிட்டது. பொறை, சமோசா என ஜிம்மிக்கு ஆசைக்காட்டி
தன் பக்கம் இழுக்கப் பார்த்தும்
பலனில்லை. இறுதியாக ஜிம்மியின் நிகழ்ச்சி நிரலை அனுசரித்து
எங்களது வெளி வேலைகளை
முடித்துக் கொள்ளப் பழகி கொண்டோம்.
காலனியின் பிள்ளைகளுக்கு
பெற்றவர்கள்
ஏதேனும் வேலை வைத்தால் ஜிம்மி பேரைச் சொல்லி தப்பித்துவிடுவார்கள். பிள்ளைகள் சோம்பேறிகளாக வலம் வருவதை
காண்கின்ற வருத்தம் ஒரு பக்கம், சொந்தக்காரர்கள்
எவரும் வருவதில்லையே என்கிற
வருத்தமோ இன்னொரு பக்கம், ஏற்கனவே
குடியிருந்தவர்களும் காலி செய்து கொண்டு காலனிக்கே பெரிய கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டதால், வாடகைக்கு யாராவது
வரமாட்டார்களா
என்ற ஏக்கம் மறுபக்கம்
என காலனியே சோகத்தில் ஆழ்ந்து போனது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், காலனிவாசிகளுடன்
கொடுக்கல் வாங்கல் வைத்துக்
கொள்ளக்கூட எந்த ஊரும் தயாராக இல்லை.
அன்றைய காலைப்பொழுது உண்மையாகவே
காலனிவாசிகளுக்கு
நல்ல செய்தியுடன்தான் விடிந்தது. சோமுவை பெங்களூருக்கு
மாற்றிவிட்டார்களாம். இதைத் தானே இத்தனை நாள் எதிர்பார்த்திருந்தோம். பட்டாசு, தாரை தப்பட்டை எல்லாம்
தயார், சோமுதான்
இன்னும் கிளம்பிய பாடாக இல்லை. மேலிடத்தில் போய் இந்த மாற்றல் உத்தரவை எதிர்த்து முறையிட்டதாகவும், ஆனால் போட்ட உத்தரவு
போட்டதுதான்
என மேலிடம் கூறிவிட்டதாகவும், தகவல்கள்
பியூன் ராமன் மூலம் கசிந்தன. அந்த நாளும் வந்தது. இருப்பதையெல்லாம்
வந்த விலைக்கு விற்றுவிட்டு,அத்தியாவசியமானதை மட்டும்
பார்சல் லாரியில் அனுப்பிவிட்டான்
சோமு. டாடா சுமோ வாசலில் உறுமிக்
கொண்டிருக்க, சோமுவின் குடும்பம்
மெதுவாக வெளியில் வந்து காரில் ஏறியது. மூச்சைப் பிடித்துக்
கொண்டு இந்த இறுதி காட்சிகளைப்
பார்த்துக் கொண்டிருந்தோம். காரும் நகர ஆரம்பித்தது. நாங்களும் இதைக் கொண்டாட தயாரான
வேளையில்தான் அந்த விபரீதத்தை காண நேர்ந்தது. புழுதியை கிளப்பியபடி
கார் போகிறது, அதைத் துரத்தியபடி ஜிம்மி ஓடுகிறது. சிறிது நேரம் கழித்துத்தான்
எங்களுக்குப்
புரிந்தது, ஜிம்மியை சோமு கைகழுவி
விட்டான் என்பது.
எங்களுக்கோ பெரிய குழப்பம் இப்போது
என்ன செய்வது? காரைத் துரத்தியபடி தெருமுனை
வரை ஓடிய ஜிம்மி மீண்டும் திரும்பி வருவதைப்
பார்த்தவுடன்
கால்கள் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தன. ஆனால் ஒரு ஆச்சரியம்
பாருங்கள், நடுக்கமிருந்தாலும் யாரும் நகரவேயில்லை. ஜிம்மியும்
நெருங்கி வந்து கொண்டிருந்தது. எங்கள்
பையன்களும் கையில் கிடைத்ததை எடுத்துக்
கொண்டு தயாராக இருந்தனர். ஜிம்மி ஏறெடுத்து
யாரையும் பார்க்காமல்
துக்கத்துக்குச்
சென்று வந்த பெரிய மனிதர் முகத்தை எப்படி வைத்திருப்பாரோ
அப்படி முகத்தை வைத்துக் கொண்டு பற்றற்ற ஞானியைப்
போல வெறுமையான பார்வையுடன்
நேராக சோமு குடியிருந்த வீட்டின்
முன்னால் வந்து நின்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு
அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டது. அதை அடிக்க ஓங்கிய கைகள் பெரிசுகள்
எவரும் தடுக்காமலேயே தயங்கி நின்றன. எங்களைக்
காலம்காலமாய்
பயமுறுத்திக்
கொண்டிருந்த ஜிம்மியல்ல இது. அதனுடைய
நிலைமை எங்களை என்னமோ செய்தது. சோமுவின்
சுயநலத்தை நினைத்து காலனியே காறிதுப்பியது.
சோமு இங்கு குடிவந்தபோது
பக்கத்து வீடு காலியாக இருந்தது. அதன் தாழ்வாரத்தில்
ஒரு பெட்டை நாய் நான்கு குட்டிகள் போட்டிருந்தது. நைநையென்று
அவைகள் போடும் சத்தம் சோமுவை எரிச்சல் படுத்த, தடியை எடுத்துக்கொண்டு
நாயை விரட்ட ஓடினான். இவன் சத்தமிட்டுக்
கொண்டே ஓடிவருவதைக் கண்டு தனது குட்டிகளை
வாயால் கெüவிக் கொண்டு வேகவேகமாக பக்கத்திலிருந்த
புதரை நோக்கி ஓடியது அந்த பெட்டை நாய். ஆனால் சோமு வருவதற்குள் அதனால்
மூன்று குட்டிகளை மட்டுமே
அப்புறப்படுத்த முடிந்தது. சோமு வந்து பார்க்கும் போது ஒரு குட்டி நாய் எழுந்து நிற்க
முயற்சித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் கால்களோ தழைந்து தழைந்துப் போக அக்குட்டி
நிற்கமுடியாமல்
தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்த சோமு என்ன நினைத்தானோ சட்டென்று
அதை வாரியெடுத்துக்
கொண்டு கொஞ்சலானான். அந்த குட்டி நாய்தான் இந்த ஜிம்மி. அருமை பெருமையாய் வளர்த்துவிட்டு இப்படி
அம்போவென விட்டுவிட்டுப்
போய்விட்டானே என காலனியே
சோமுவை மண்வாரி தூற்றாத குறையாய்
சபித்தது. போறது பெங்களூரு இல்ல, அதுதான் கெüரவ
குறைச்சல்னு நாட்டு நாயை இங்கேயே விட்டுட்டுப் போயிட்டான்
பாவிமவன் புசுபுசுன்னு இருக்கிற
வெளிநாட்டு நாயாக இருந்திருந்தால் இப்படி
தெருவில் கிடாசிவிட்டு
போயிருப்பானா என்று ஒரு பெருசு பொறுமியது. அவரவர்களுக்கென்று
ஆயிரம் வேலைகள் காத்திருப்பதால் கூட்டம்
மெதுவாக கலையலாயிற்று.
சாப்பிட்டு
முடித்து படுக்கப் போகும்போதுதான் ஒரு மாற்றத்தை
கவனிக்க முடிந்தது. ஜிம்மியின்
குரைப்பொலி கேட்கவேயில்லை. நேற்று வரை அக்குரைப்பொலி நாரசமாய் என்று ஒழியுமிந்த
இம்சையென தோன்றியது. இன்றோ ஜிம்மியின்
குரைப்பொலி கேட்காதது
ஏதோ ஒன்று குறைந்து போனது போல தோன்றியது. இந்த விந்தையை எண்ணியபடியே காலனி உறங்கிப் போனது. காலைப்பொழுது
இப்பொழுதுதான் உண்மையான காலைப் பொழுதாக காலனிவாசிகளுக்குத் தோன்றியது.
ஜிம்மியின் அட்டகாசம்
இல்லாத, அமைதியான
வாழ்க்கை இன்று முதல் துவங்குகிறது. ஜிம்மியைப் பார்த்துவரலாமென
ஊரே கிளம்பிவிட்டது. நேற்று மாலை எங்கு படுத்துக் கிடந்ததோ
அதே இடத்தில்தான் இப்பொழுதும்
இருந்தது. தலையை முன்னங்கால்களுக்கிடையில்
புதைத்துக் கொண்டு படுத்துக்கொண்டிருந்தது. காதுகள் மடிந்து தொங்கட்டான்
போல தொங்கிக் கொண்டிருந்தது. பழைய கோபம் மக்களுக்கு
சட்டென்று மாயமாகிவிடுமா
என்ன? நாலு பக்கத்திலிருந்தும் பல்வேறு
தினுசான கற்கள் மடமடவென
ஜிம்மியின் மீது பொழியத்தொடங்கின. ஜிம்மி லேசாக தலையைத் தூக்கிப்
பார்த்ததோடு சரி, தண்டனையை
நேருக்கு நேராய் சந்திக்கும் நெஞ்சத்துடன்
அமைதி காத்தது. எல்லாம்
சிறிது நேரம்தான். ஜிம்மியின் மீதிருந்த
கோபம் எங்கு போயிற்றோ? பக்கத்து
வீட்டுப் பெண் கொஞ்சம் சாதம் எடுத்துக் கொண்டு வந்து ஜிம்மியின்
முன்னால் தயங்கியபடியே
வைத்தாள். அதை முகர்ந்து கூடப் பார்க்காமல்
தலையை தனக்குள்ளாக புதைத்துக்
கொண்டது. குற்றவுணர்வு
மேலிட கூட்டம் மௌனமாக கலைந்து போனது.
நாட்கள்
பறந்த வேகத்தில் லோகநாதன்
காலனிவாசிகள் ஜிம்மியை
மறந்துப் போனார்கள். ஜிம்மியை கூட முன்பு மாதிரி காலனிப்
பக்கம் பார்க்கமுடியவில்லை. இரவு நேரத்தில் சாப்பிட்டு
முடித்தவுடன்
கையை தட்டில் கழுவ என் தந்தை அனுமதிக்கமாட்டார். தட்டில் கொஞ்சம்
சாதத்தை மிச்சம் வைத்து, அதை வீட்டு வாசலில் ஓரமாகவுள்ள
கல்லின் மீது கொட்டி, ஜூ.. ஜூ..வென நாய்களை கூப்பிட்டு
சாப்பிட வைக்க வேண்டும். அதன் பிறகுதான்
அப்பாவுக்கு ஏப்பமே
வரும். அப்பா காலமாகி பதினைந்து
வருடங்களாவிட்டது. காலம் மாறிவிட்டது. விலைவாசி ஏற்றம்
மனிதர்களை மட்டுமா
பாதித்துள்ளது. நாய்களையும்தான்
கடுமையாக பாதித்துள்ளது. முன்பு மாதிரி யாரும் தட்டில் மிச்சம்
வைப்பதுமில்லை. மிச்சமாகுமளவுக்கு சமைப்பதுமில்லை. சிந்தும்
பருக்கையை ஊசியால் குத்தி தண்ணீரால்
அலசி சாப்பிடும் காலத்தில்
நாய்களுக்கு எங்கே சாப்பாடு கிடைக்கும்? தட்டில் கையை கழுவும்
போதெல்லாம் அப்பாவை நினைத்துக்
கொள்வேன். கூடவே தவிர்க்க முடியாமல்
ஜிம்மியின் ஞாபகமும் வந்துவிடுகிறது. இப்போதெல்லாம்
ராப்பிச்சை கேட்டு பிச்சைக்காரர்கள்
கூட வருவதில்லை. கடைவீதிகளில்
பிச்சை எடுப்பதோடு அப்படியே போய்விடுகின்றார்கள். நாய்களுக்கே அன்னமிட யோசிக்கும்
தேசம், பிச்சைக்காரர்களுக்கா
அன்னமிடும்?
மருத்துவமனையிலும் முன்பு போல நாய்க்கடி ஊசிக்கு பெரிய அளவுக்கு வேலையில்லாமல்
போய்விட்டது. அன்று எனக்கு ஓய்வு நாள். நண்பனை
பார்த்து வரலாமென சென்றேன். போகும் வழியில்
ஒரு அருமையான காட்சி. ஜிம்மியின்
மீது நாலைந்து தெரு நாய்கள் விழுந்து புரண்டு விளையாடிக்
கொண்டிருந்தன. ஜிம்மியோ
மோன தவத்திலாழ்ந்திருந்தது. இதைக்காண
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. தனது தெருவுக்குள் வேறெந்த நாயாவது லேசாக தலைக்காட்டி விட்டால்
போதும். ஜிம்மி தெருவையே கலவர
பூமியாக்கிவடும். ஊரடங்குச்
சட்டம் போடப்பட்ட பகுதியாக கப்சிப்பென ஊர் அடங்கியொடுங்கிவிடும். வாலை பின்னங்கால்களுக்கிடையில் சுருட்டிக்
கொண்டு அந்த வெளி நாய் வெளியேறும்வரை
இந்த அமளி அடங்கவே அடங்காது. அந்த ஜிம்மிதானா
இதுவென என்னால் நம்பவே முடியவில்லை.
No comments:
Post a Comment