வாசிக்கும் போது என்னைக் கவர்ந்த வரிகளை எழுதி வைப்பது வழக்கம். தற்செயலாக வீட்டைச் சுத்தம் செய்கையில், பல வருடங்களுக்கு முன் அப்படி எழுதிவைத்த பழைய நாட்குறிப்பேடு கிடைத்தது. தொலைந்து போய்விட்டது என நான் நினைத்த குறிப்பேடு அது. திரு. யு.எஸ்.மோகன்ராவ் அவர்களின், மகாத்மா காந்தியின் போதனைகள் என்கிற புத்தகத்திலிருந்து, காந்திஜியின் கருத்துக்களை வரிக்கு வரி எழுதிவைத்திருந்தேன். அரசியல், தத்துவம் ரீதியாக காந்திஜியின் கருத்துக்கள், நிலைபாடுகள், நடவடிக்கைகள் மீது, மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட என்னைப்போன்றவர்களுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. என்றாலும் அவரது தன்னலமற்ற வாழ்க்கை, எளிமை, அஞ்சாமை, மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மேதைமை... போன்றவை, என்னை எப்போதும் அவரைக் குறித்து சிந்திக்க வைத்துக்கொண்டேயிருக்கும். அந்தவகையில் என்னை அதிகமாக ஈர்த்த, காந்திஜியின் மேற்கோள்கள்களின் சிறிய தொகுப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். அவரது உறுதியான நம்பிக்கைகளை, நிலைபாடுகளை இந்த மேற்கோள்கள் ஆழமாக விளக்குகின்றன.
(பக்க எண்:210-229.)
1. சாசுவதமான உண்மையான எதையும் நாம் சாதிப்பதற்கு, அஞ்சாமை என்பது இன்றியமையாத முதல்தேவை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.
2. ஆன்மிக வாழ்வுக்கு முதல் தேவை அஞ்சாமைதான். கோழைகள் ஒருக்காலும் நல்லொழுக்கத்துடன் இருக்கமுடியாது.
3. நம்முடைய வார்த்தைகளுக்குப் பதில் நம்முடைய வாழ்க்கை நம் சார்பில் பேசுவதுதான் சிறந்தது. நம்பிக்கை தன்னைப் பற்றிப் பேசப்படுவதை அனுமதிப்பதில்லை. அதை வாழ்வில் காட்டவேண்டும். பிறகு அது தானாகவே பிரசாரம் செய்துகொள்ளும்.
4. நன்மைக்குப் பதில் நன்மை செய்வது வெறும் பேரம்தான். அதில் பெருமை எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் தீமைக்குப் பதில் நன்மை செய்தால் அது இரட்சிக்கும் சக்தியாகி விடுகிறது. அதன் முன்னிலையில் தீமை மறைந்துவிடும்.
5. மகிழ்ச்சியின்றிச் செய்யும் தியாகம் எதுவும் தியாகமல்ல. தியாகத்துக்கும் உம்மணாமூஞ்சிக்கும் ஒத்துவராது. தியாகம் என்பது ’‘புனிதப்படுத்தும்’’ செயலாகும். தன்னுடைய தியாகத்துக்காக அனுதாபம் தேடுபவன் மனிதர்களுள் கடைப்பட்டவன் தான். அந்தத் தியாகம் நிலைக்காது.
6. போராட்டத்தில், முயற்சியில், கஷ்டப்படுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது. வெற்றியில் அல்ல. ஏனெனில் இந்த முயற்சியிலேயே வெற்றி அடங்கி இருக்கிறது.
7. ஒருவன் அவனுடைய சிந்தனைகளினால்தான் உருவாகின்றான். அவன் எதை நினைக்கின்றானோ அதுவாக மாறுகின்றான்.
8. சகோதர மனிதர்களின் நல்வாழ்வுக்காக ஒரு மனிதன் எந்த அளவுக்குப் பாடுபடுகின்றானோ அதே அளவுக்குத்தான் அவனுக்குப் பெருமை ஏற்படுகின்றது.
9. இஷ்டப்பூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யும் வேலை ஒருக்காலும் கஷ்டமாக இருக்காது.
10. ஒருவரிடம் இயல்பாக உள்ள அடக்கம் ஒருக்காலும் வெளிக்குத் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் அவருக்கோ தம்மிடம் அது இருப்பதாகவே தெரியாது.
(பக்க எண்:209)
11. கேள்வி:- இந்தியா சுயாட்சி பெற்றபின் கல்விக்கு எத்தகைய குறிக்கோள் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?.
காந்திஜி:- ஒழுக்கத்தை வளர்ப்பது குறிக்கோளாக இருக்க வேண்டும். தைரியம், வலிமை, நற்குணங்கள், மகத்தான காரியங்களுக்காகத் தன்னை மறந்து வேலை செய்வது என்ற பண்புகளை வளர்க்க முயலவேண்டும். எழுத்தறிவை விட முக்கியமானது இது. இந்த மகத்தான குறிக்கோளுக்கு ஒரு சாதனம்தான் பாடப்படிப்பு.
12. நல்ல பொருட்களை மற்றவர்கள் எல்லாம் பெற்ற பின்னர் தான் பெற்றுக் கொள்வது, ஒவ்வொருவருக்கும் தொண்டாற்றுவது, நன்றியை எதிர்பார்க்காமை, கஷ்டப்படுவதற்கு முதல் ஆளாக இருத்தல் என்பவைதான் நம்மை ஒரு பூஜ்யமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கான பொருள். இவ்வாறு தம்மைப் பூஜ்யமாக்கிக் கொள்ளும் ஒருவர் எப்போதும் தம்முடைய கருமத்திலேயே கண்ணாக இருப்பார்.
13. வாழ்வின் ஒரு துறையில் தவறான முறையில் செயலாற்றும் மனிதன், இன்னொரு துறையில் நல்ல முறையில் செயலாற்ற முடியாது. வாழ்க்கை என்பது பிரிக்க முடியாத ஒரு முழுப் பொருள்.
14. தவறு செய்வது மோசமான காரியம். ஆகவே அது குறித்து நாம் வெட்கப்பட வேண்டும். ஆனால் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதுதான் நல்ல காரியம். ஆகவே இதற்கு வெட்கப்படக் கூடாது. தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதில், இனி தவறு செய்யாதிருக்கும் உறுதியும் அடங்கியிருக்கின்றது. இவ்வாறு உறுதி கொள்வது வெட்கத்திற்குரியதா?.
15. தவறு செய்வது மனித இயல்பு. தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலம், முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக அவற்றை மாற்றிக் கொள்கிறோம்.
இதற்கு மாறாக, ஒருவர் தம்முடைய தவறுகளை மறைக்க முயன்றால், அவர் மோசடியின் உருவமாகி விடுவார். இழிவடைவார்.
16. ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு உரிமையுள்ளவரின் முன்னிலையில், நம் பாவத்தை ஒப்புக்கொண்டு, மறுபடியும் அதைச் செய்யாதிருப்பதாக வாக்குறுதி அளிப்பதுதான் மிகத்தூய்மையான கழிவிரக்கமாகும்.
17. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் வேறு இல்லை.
18. மனித குலத்துக்குத் தொண்டாற்றுவதாகச் சொல்லிக்கொள்பவர் தம்முடைய சேவையைப் பெறுவோரிடம் கோபப்படாமல் இருப்பது அவருடைய கடமை.
19. ஆவேசமான ஈடுபாடும், பரிபூரணமான பற்றின்மையும் எல்லா வெற்றிகளுக்கும் திறவுகோலாகும்.
(பக்கம்-103)
20. கோடிக்கணக்கான ஜனங்களுக்குக் கிடைக்காத எதையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பொன் போன்ற விதியாகும். இவ்வாறு நிராகரிக்கும் ஆற்றல் நமக்குத் திடீரெனச் சித்திக்காது. வெகுஜனங்களுக்குக் கிட்டாத உடமைகளையும், வசதிகளையும் நாம் பெறக்கூடாது என்ற மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக அந்த மனப்பான்மைக்கு உகந்த விதத்தில் நம்முடைய வாழ்க்கையைக் கூடிய சீக்கிரம் மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்.
(பக்கம்-78)
21. பிறப்பும் இறப்பும் பெரிய மர்மங்கள். சாவு என்பது இன்னொரு வாழ்வுக்குப் பீடிகை அல்ல என்றால், இடையில் ஒரு காலகட்டம் இருப்பது குரூரமான கேலிக்கூத்துக்குத்தான். எப்போது மரணம் வந்தாலும், யாருக்கு மரணம் சம்பவித்தாலும் அது குறித்துத் துக்கமே அடையாமல் இருக்கும் கலையை நாம் கற்கவேண்டும். நம்முடைய சொந்த மரணத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இருப்பதற்கு நாம் உண்மையாகவே கற்றுக்கொண்டால்தான் அவ்வாறு செய்ய முடியும் என நினைக்கின்றேன். நமக்கு விதிக்கப்பட்டுள்ள பணியைச் செய்துவிட்டோம் என்று ஒவ்வொரு வினாடியும் நாம் உணர்ந்தால்தான் நம்முடைய மரணம் பற்றி துச்சமாக இருக்கமுடியும்.
22. ஒருவர் தம்முடைய சிந்தனைகளை பிரகடனப்படுத்தவோ, அவற்றை வெளிப்படையாகச் செயலில் காட்டவோ அவசியப்படாத ஒரு நிலை வாழ்க்கையில் ஏற்படுவதுண்டு. சிந்தனைகளே செயல் புரியும். அந்த ஆற்றலை அவை பெற்று விடுகின்றன. இப்பேர்பட்ட நிலையை அடைந்தவர் சும்மாயிருப்பதாகத் தோன்றினாலும் அவர் செயல் புரிவதாகவே சொல்லலாம். அந்த நிலையை எட்டுவதற்கு நான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.
23. உண்மையான சுய கட்டுப்பாடு என்றால் அது ஒருவருக்குத் தெம்பு ஊட்டவேண்டும். அச்சத்தையோ, துக்கத்தையோ ஏற்படுத்தினால் அது இயந்திரகதியானதுதான் அல்லது மேலெழுந்தவாரியானதுதான்.
24. மனிதன் எப்போதுமே பூரணமற்றவனாகத்தான் இருப்பான். பூரண நிலையை அடைவதற்காக அவன் எப்போதும் முயன்று கொண்டிருக்கவேண்டும்.
25.வாழ்வும் சாவும் ஒரே நாணயத்தின் இரு புறங்கள் தாம். நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் போலவே மகிழ்ச்சியுடன் இறக்கவும் வேண்டும். எனினும் உயிர் இருக்கும் வரை உடம்புக்கு உரிய பராமரிப்பு அளிப்பது அவசியம்.
26. நம்முடைய தேவைகளைத் திட்டவட்டமாக, இஷ்டப்பூர்வமாகக் குறைத்துக்கொள்வதுதான் “நாகரிகம்” என்ற சொல்லின் உண்மையான பொருள். தேவைகளைப் பெருக்கிக் கொண்டு போவதல்ல. இவ்வாறு குறைத்துக்கொள்வது தான் உண்மையான சந்தோஷத்தையும், திருப்தியையும் அளிக்கும். தொண்டு புரியும் சக்தியை அதிகரிக்கும்.
27 குறைவாகப் பேசுகின்ற ஒருவர் சிந்தனையின்றிப் பேசுவது மிகவும் அபூர்வம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் எடை போட்டே பேசுவார்.
28. பேசும் ஆற்றல் இருந்தபோதிலும், அனாவசியமாக ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருப்பவர்தான் உண்மையான மௌனி.
* * * * * * *
No comments:
Post a Comment