22/03/2016

நினைவஞ்சலி.

அன்பு நண்பர்களே,                                                           இன்று (22/3/16) காலை 7.28 மணிக்கு எமது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தோழர். T.S.குமார் அவர்கள்  66வது வயதில் தனது உயிர் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். கடந்த பல மாதங்களாக அவர் உடல் நலமின்றி இருந்து வந்தார். BSNL துறையில் தொழில்நுட்பனராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.                                                                 தோழர். குமார்  மார்க்சியத்தினை தத்துவார்த்தமாக உள்வாங்கியவர். அதனால்தான் ஊசலாட்டமின்றி அவரால் நம்பிக்கையுடன் இருக்கமுடிந்தது. எப்போது பேச வேண்டும், எப்போது பேசக்கூடாது என்பதை துல்லியமாக அறிந்தவர். அமைப்புரீதியான பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள் அவரை என்றும் பாதித்ததில்லை விவாதங்களை எப்படி நடத்தவேண்டும், கூட்டத்தை எப்படி கட்டுப்பாடுடன் வ்ழிநடத்தவேண்டும் என்பதை நடைமுறையில் போதித்தவர். எவரையும், எப்போதும் அவர்  கண்ணியக்குறைவாக நடத்தியதுமில்லை, பேசியதுமில்லை.                                            கம்பீரத்தின் பெயர் தோழர். குமார். கம்பீரம் என்றால் அவரது நடை, பேச்சு, அவரது உருவம், குரல், மீசை என அனைத்துமே கம்பீரம்தான்.  ஊர்வலங்களில்  தனது பேராண்மைமிக்க குரலொலியில் அவர் கம்பீரமாக எழுப்பும் முழக்கங்கள் வர்க்க உணர்வு, ஜனநாயக உணர்வு உள்ள எந்த ஒரு நெஞ்சத்தையும் தம் வசமாக்கிக்கொள்ளும். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் தோழர். குமார். தனது மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதுடன் சிறப்பாக திருமணமும் செய்து வைத்தார்.                                                                                 மாற்றுமருத்துவத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். சித்தா,ஹோமியோபதி, அக்குபிரஷர் என அவரது ஆர்வம் பரந்த அளவில் இருந்தது.  பொதுவாக அன்றைய காலகட்ட மார்க்சியர்களில் அனேகர் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள். தோழர். குமாரும் அதற்கு விதிவிலக்கல்ல.  தொடர்ச்சியாக  சிகரெட்டை புகைத்து வந்ததால், அதுவே அவர் நோய்வாய்ப்படவும் காரணமாயிற்று. ஆனால் அவர் தனது உடல் வலியை, மன உளைச்சலை, என்றுமே வெளியிட்டதில்லை. மெளனமாகவே தனக்குள் அடக்கிக்கொண்டவர். சிறப்பு கவனத்தை அவர் என்றுமே கோரியதில்லை. அவர் நோய்வாய்பட்ட நாள் முதல் மரணித்த இந்த நாள்வரையில் அவரது மகன் திரு. விஜய், மற்றும் அவரது துணைவியார். திருமதி. விஜயலட்சுமி இருவரும் அவரை கவனித்துக்கொண்டவிதம் எல்லோரையும் பிரம்மிக்கவைத்தது. தோழர்.குமார் கொடுத்துவைத்தவர் என ஊரார் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களது பராமரிப்பு இருந்தது.                                                           தோழர். குமார் தனது BSNL துறைரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றவர். மார்க்சியத் தத்துவத்தின் மீது மலையளவு நம்பிக்கையுள்ளவர். தான் சார்ந்திருந்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்திற்கு தனது உறுதியான ஆதரவை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்கியவர். நம்பிக்கை, அமைதி, உறுதி இந்த வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்தவர், அதுவாகவே வாழ்ந்தவர். தோழரே என்ற விளிப்பை செவிமடுத்துக்கொண்டே மரணித்தவர்.                                                                                            தோழர். குமார் நீங்கள் மரணித்தது  உடல் அளவில்தான். மார்க்சியம் பற்றிய பேச்சு எங்கு ஒலித்தாலும் அங்கு உங்களது நினைவு படர்ந்திருக்கும். எங்கு இன்குலாப் முழக்கம் கேட்டாலும் உங்களது உருவம் மனக்கண்களில் நிழலாடுவதை தடுக்கமுடியாது.  உங்களது நினைவு நீடூழி வாழ்க.                                                                                                                     

18/03/2016

செய்யாமல் செய்விப்பவர்.

எனது குருநாதர் சாமி, அழகப்பன் அவர்களை தமிழ்ச்சமூகம் நன்கறியும். அவரது மச்சமுனி வலைதளம் நல்வாழ்வுக்கோர் பேரகராதி. சித்த மருத்துவத்தினை பாமரனும் அறியும் வண்ணம் எடுத்துரைக்கும் அற்புத அரிச்சுவடி. எளிய தமிழில் அழகுற அவர் விளக்கி எழுதும்  பதிவுகள் நெஞ்சத்தை அள்ளி அறிவுவாசலை திறக்கும்.                                                                                                                                                அக்குபங்சர் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வர்மக்கலையினை பழுதறக் கற்றவர், சித்தமருத்துவ பரம்பரையின் ஒன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவர். ஆழமான தமிழ் இலக்கிய புலமையுள்ளவர். இன்னும் எத்தனையோ சிறப்புகளை சொல்லிச்செல்லலாம். எனினும் சிறப்பாக சொல்லவேண்டுமெனில் அவர் பற்றறுத்த மாமனிதர். பந்தம், பாசம், பணம், பதவி, புகழ் என எதுவொன்றாலும் பாதிக்கப்படாதவர். ஆனால் அவரது மனத்தை உங்களது பணிவாலும், சேவைமனப்பான்மையாலும், கற்கும் ஆர்வத்தாலும் மட்டுமே கவர முடியும். அப்படி கவர்ந்துவிட்டால் அதற்குப்பிறகு நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டிய ஞானம், உதவி,  தக்க தருணத்தில் தக்கவர்கள் மூலம் தானாக வந்து சேரும். செய்யாமல் செய்விக்கும் ஆற்றல் மிக்கவர்.                                                                                                                                                                            அவருக்கு மாபெரும் நோக்கங்கள் உண்டு. அவற்றை தனது பதிவுகளில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். அவைகள் கூடியவிரைவில் கைகூடும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                                           அவர் எனக்கு அறிமுகமானதும், குருவாக வாய்க்கப் பெற்றதும், அவரது மனதில் இடம் பிடித்ததும் எனது வாழ்க்கையின் பாதையையே மாற்றி அமைத்துவிட்டது. எனது குண நலன்களை மேம்படுத்தியுள்ளது. எல்லையற்ற ஞானக்கடலின் கரையோரத்தில் குழந்தையாய் நிற்கவைத்து பிரம்மிக்கவைத்துள்ளது. அதேசமயம் தேவையானவை தேடாமல் தேடிவரவைத்துள்ளது. நிச்சயமாக ஒன்றை உறுதியாக கூறமுடியும், அவரை சந்திக்கும் முன் இருந்த தி,ஸ்ரீ, இப்போது இல்லை. நிறைய மாற்றியுள்ளார். அவரது வழிகாட்டலில் இன்னும் அதிக தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. நல்ல நண்பர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவர்களது ஒத்துழைப்போடு அவர் காட்டும் பாதையில் வெற்றிகரமாக பயணப்படுவேன். நன்றி குருவே.

15/03/2016

எனது கதைகளின் தொகுப்பு.

நண்பர்களே,  எனது வலைப்பூவில் பதிவாகியிருந்த எனது கதைகள், மடிகணிணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முழுவதுமாக காணாமல் போய்விட்டது. சில நண்பர்கள் உதவியதில் சில கதைகளை மீட்க முடிந்தது. என்னிடம் அசல் பதிவு இல்லை.                                                                                                                                                              ஆனால் அதிர்ஷ்ட வசமாக எனது கதைகள் அனைத்தையும்  http://www.sirukathaigal.com/எனும் வலை தளம் முழுமையாக வெளியிட்டுள்ளதால்,  அதில் கதையாசிரியர்கள் என்ற தலைப்பில் தி.ஸ்ரீ. யை தேடி சொடுக்கினால் எனது கதைகள் அனைத்தும் வாசிக்கக்கிடைக்கும், நண்பர்கள்   வாசித்து கருத்தை தெரிவிக்கக் கோருகின்றேன்.