எனது குருநாதர் சாமி, அழகப்பன் அவர்களை தமிழ்ச்சமூகம் நன்கறியும். அவரது மச்சமுனி வலைதளம் நல்வாழ்வுக்கோர் பேரகராதி. சித்த மருத்துவத்தினை பாமரனும் அறியும் வண்ணம் எடுத்துரைக்கும் அற்புத அரிச்சுவடி. எளிய தமிழில் அழகுற அவர் விளக்கி எழுதும் பதிவுகள் நெஞ்சத்தை அள்ளி அறிவுவாசலை திறக்கும். அக்குபங்சர் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வர்மக்கலையினை பழுதறக் கற்றவர், சித்தமருத்துவ பரம்பரையின் ஒன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவர். ஆழமான தமிழ் இலக்கிய புலமையுள்ளவர். இன்னும் எத்தனையோ சிறப்புகளை சொல்லிச்செல்லலாம். எனினும் சிறப்பாக சொல்லவேண்டுமெனில் அவர் பற்றறுத்த மாமனிதர். பந்தம், பாசம், பணம், பதவி, புகழ் என எதுவொன்றாலும் பாதிக்கப்படாதவர். ஆனால் அவரது மனத்தை உங்களது பணிவாலும், சேவைமனப்பான்மையாலும், கற்கும் ஆர்வத்தாலும் மட்டுமே கவர முடியும். அப்படி கவர்ந்துவிட்டால் அதற்குப்பிறகு நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டிய ஞானம், உதவி, தக்க தருணத்தில் தக்கவர்கள் மூலம் தானாக வந்து சேரும். செய்யாமல் செய்விக்கும் ஆற்றல் மிக்கவர். அவருக்கு மாபெரும் நோக்கங்கள் உண்டு. அவற்றை தனது பதிவுகளில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். அவைகள் கூடியவிரைவில் கைகூடும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. அவர் எனக்கு அறிமுகமானதும், குருவாக வாய்க்கப் பெற்றதும், அவரது மனதில் இடம் பிடித்ததும் எனது வாழ்க்கையின் பாதையையே மாற்றி அமைத்துவிட்டது. எனது குண நலன்களை மேம்படுத்தியுள்ளது. எல்லையற்ற ஞானக்கடலின் கரையோரத்தில் குழந்தையாய் நிற்கவைத்து பிரம்மிக்கவைத்துள்ளது. அதேசமயம் தேவையானவை தேடாமல் தேடிவரவைத்துள்ளது. நிச்சயமாக ஒன்றை உறுதியாக கூறமுடியும், அவரை சந்திக்கும் முன் இருந்த தி,ஸ்ரீ, இப்போது இல்லை. நிறைய மாற்றியுள்ளார். அவரது வழிகாட்டலில் இன்னும் அதிக தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. நல்ல நண்பர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவர்களது ஒத்துழைப்போடு அவர் காட்டும் பாதையில் வெற்றிகரமாக பயணப்படுவேன். நன்றி குருவே.
வாழ்க வளமுடன்
ReplyDelete